About Me

'நான்' என்னும் மையத்தை மட்டுமே அச்சாகக் கொண்டு என்னையே சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.., இந்த பூமியைப் போல. ஆனாலும் என்னைச் சூழ்ந்திருக்கும் எண்ணிலடங்கா கோள்களை அவைகளின் கவனம் கலையாது கவனித்துக் கொண்டு, அவைகளின் தடயம் பதியாது தனித்து நிற்க விரும்புகிறேன். இருப்பினும் சில நட்சத்திரங்களின் தாக்கங்கள் என்னையும் அறியாமல் அவைகள் பால் ஈர்த்துக் கொள்கின்றன.., சூரியனைப் போல, சுற்றி வரச் செய்கின்றன. பல சுழற்சிப் பாதைகளின் சிக்கல்களினூடே, இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன் எனக்கான சிறு நிலாவினை.

Tuesday, December 30, 2008

கட்டம் பிடி !! கட்டம் பிடிடா !! கண்டபடி கண்டுபிடிடா !!






பயனிகள் கவனத்திற்கு :
I. இங்கு கொடுக்கபட்டிருப்பவை குறிப்புகள் மட்டுமே ! கேள்விகள் அல்ல.
II. இ.வ , வ.இ. , மே.கீ. , கீ.மே., என யோசிக்கவும் ; பிறகு நிரப்பவும்.
III. கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் உங்கள் கருத்தினை பதிவு செய்யவும். விளக்குரைகள் வழங்கப்படும் .
IV. விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன.
V. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.


இடமிருந்து வலம்:
1. போருக்குப் பின்பு; அதில் மோருக்கு முன்பு (5)
7. தீம் தனனா தீம் தனனா தீம் தனனா தீம் தனனா ... தீம் ததன தினனா (3)
9. மண்ணும் பெண்ணும் கொள்ளையடிக்கபட்டால் (தமிழில்) என்னவென்று அர்த்தம் ?(8)
*11. hollywood's giant; Kollywood's dwarf (4)
13. பதமாய் வகையாய் பிரி (2)
15. ரொம்ப காற்று வாங்க போனேன் .. பழங்கவிதை வாங்கி வந்தேன் (6)
18. அணி ஏற்காத அறிவிலி (4)
22. கருப்பு வெள்ளை இல்லை ஆனால் உண்டு (3)
24. துஷ்யந்தன் தலைமுறை பேசியது இந்தியா ? (3)
26. தைரியமாக தாண்டவமாடிய இடம் (3)
27. அன்று பாலை வனம் ; இன்று பாலை வளம் (3)
29. மென்பொருள் இணைந்த 'மாநிலம்' (6)
31. தாட்சாயணி மதிப்புடன் ஆடுகிறாள் பரதம் (3)
33. இந்தக் 'கடவுளை' இரவில் காண முடியாது (2)
34. முதல் மனிதனின் கடைசி காயம் (4)
37. காதலையும் தூண்டும் ; சாதலையும் தூண்டும் (2)
38. ஊருக்குள் செல்லாது; ஊராது செல்லும்; ஊரூராகச் செல்லும் (3,5)

வலமிருந்து இடம்:
5. வீட்டுக்கு வீடு கி.ரா எழுதியது (3)
8. காதல் சொன்ன கணத்தில் அத்தைக்கும் மீசை முளைக்கக் காரணம் ? (4)
17. கார்குழலிடம் காற்றின் விளையாட்டு..
வினையும் பெயரும் ஒன்றே இங்கு
என்பேன் நான். (2)
23. பொய் - சொன்னால் பிடிக்கும்; அடித்தால் வலிக்கும் (2)
25. வெளிப்பாடு: கண்- காதல்; கன்னம்-வெட்கம்; மூக்கு - ? (3)
36. வாய்க்கும் நாவுக்கும் மத்தியில் வராத விலங்கு (2)

மேலிருந்து கீழ்:
*1. முதற்கால் தலை ஆட்ட வைக்கும்; முழுக்கா ஆளையே ஆட்டுவிக்கும் (7)
2. மனிதனுக்கு பிடிக்கும்; பிடிக்கும் பிடிக்கும் (3)
3. Yash Chopra வின் 2007 ஆம் வருட படத்தின் பிற்பாதி மிக அறுவை (4)
4. ஆத்துக்குள் பிடித்தால் தப்பில்லை
அகத்துக்குள் பிடித்தால் தப்பில்லையோ ?(2)
5. கல்யாணி மாலை (4)
06. அறுக்காணியின் நம்பிக்கையை அறுத்தது உலக அதிசயம் (6,6)
10. பெரிய காயம் ஆனால் சின்ன காய் (3)
11. மந்தைவெளியில் பாதி கிடையாது (2)
12. சூரியன் வரும் பொழுது நமஸ்கரிப்பது (2)
14. குற்றாலத்தில் ஆள் இல்லை - No water.
குற்றாலத்தில் ஆல் இல்லை - what matter ? (4)
15. நுதலின் எல்லை கோட்பாடு (2)
*23. அறுவடைக்கு தயாராகும் தேர்தல் சின்னம் (3)
19. ராசியான வள்ளல் ; விசுவாசியான இளவல் (7)
24. வரவு செலவு கணக்கு பார்க்கும் எத்திராஜ் வாத்தியார் (3)
25. கால் கொம்புகளோடு 'குண்டாக' இருக்கும் காலம் (2)
21. மீனும் மலரும் ஒரு 'துண்டு வான்கோழியில்' (5)
28. பத்தில் மகரம்; நிகரில் தகரம் (4)
30. குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு பொருட் பன் மொழி (2)
33. கூட்டம் மிக விரும்பியது (3)

கீழிருந்து மேல் :
*20. இளமைக்கு முழுமையளிக்கும் மணம் (5)
32. நம்பக சக்தி அளிக்கும் Mr. India (3)
35. என்னைத் துரத்திக் கொண்டே வருகிறாள்
நான் உருவாக்கும் எல்லாக் குறுக்கெழுத்துக்களில்
மட்டும். (2)
39. சிறைக் கைதியின் ஆரம்பமே முடியா(வா)னது (2)
40. தறியின் வினை பொருள்; தயிரின் விளை பொருள் (2)
41. சாப விமோசனம் கொடுத்த எழுத்தாளர் (2)

Monday, January 21, 2008

சர்க்கரை
கரையாத
காப்பியின்
கடைசி
இனிப்பு மடக்குகள்
உணர்த்துகின்றன
சில வாழ்வியல் நியதிகளையும்,
பல சொலப்படாத தத்துவங்களையும்.

வழக்கம் போல,
அலட்சிய சப்தங்களோடு
உறிந்து குடிக்கிறேன்
கடைக்காரனை
சபித்துக்கொண்டே...

Wednesday, January 2, 2008

பொன் நிறத் தாமரை,

ஊஞ்சலாடி,

விஜயாலயன்,

மயிற்பீலி,

உச்சிமலை,

wiki,

மந்த மாருதம்,

பூக்குட்டி,

சமீபத்தில்

Amores perros.

இன்று,

உன்னை பார்த்த பின்

நீ.


நான்

ஒவ்வொருமுறை

பிறக்கும் போதும்

எனக்கிட்டுக் கொண்ட

பெயர்கள் இவை.

மர்மம் மிகுந்த
இயற்கையின்
மௌனத்தை
தியனித்துக்
கொண்டிருக்கிறேன்,
TV சத்ததின்
இரைச்சல்களுக்கும்
இரயில் வண்டியின்
எக்காளங்களுக்கும்
நடுவே..
அந்நொடியிலே
இக்கவிதையையும்
யோசித்தேன்.

How to Name it..

ஒரு ஊரில் ஒரு நரி.,
அத்தோடு கதை சரி.

இதுவே

கதை..,

கவிதை..,

பிறகு

இதன் தலைப்பு.

Monday, July 30, 2007

Nature Nurtures.... but how ??

இறைவன் இந்திரி யத்தினா லொருகரு
இயல்பாய் வெளிவந்து கொண்ட தோருரு
வளியதன் செவியாய் விண்ணதன் வாயாய்
விழியென அனலும் கூர்நாசியென புனலும்
விளைநில மேனியென பூதங்களே புலன்களாய்
பிறந்த பிள்ளைக் கிட்டபெயர் இயற்கை


நொடிப் பொழுதில் நெடிது யர்ந்த
நங்கைக்கு நல்லதோர் இல்வாழ்வு நல்க
நேசக்கரம் நீட்டினான் காலப் புருஷன்
கணவன் கைக்காரியத் தினால்கன் னியவள்
கண்களின் அம்சமாய் இரவியும் திருமேனி
பிரதியாய் பனிமலையும் நாசியின் வாசமாய்
ஆழ்கடலும் பின்னிவை சார்ந்த மதிமுகிலும்
புல்லும் செடிகொடியும் மரமும் காடுமெனப்
பெற்றுப் போட்டாள் இயற்கை அன்னை


பனியுருகி பிரவாகமென உருவம் எடுத்து
பாயுமருவியாய் ஓடுமாறாய் பெருகுமூற்றாய் தலைமுறைப்
பரிணாமமாய் தனது மற்றொரு பரிமாணமாய்
பிரியத்தோடு படைத்தாள் அப்பெருந் தேவியே!!


சார்ந்தே இருந்தும் சுந்தர வாசம்
செய்யும் சுந்தர செல்வங்களை சுவீகரிக்க
செய்தாள் முதல் உயிர் புழுவாக
பதியின் துணையில் புழு பறவையென
மாறிபின் மிருகமாகி பின் மனிதனானது
பரிணாம வளர்ச்சி என்னும் பெயரோடு


காலதேவன் தன்னாயுள் கூட்டும் பொருட்டு
தினம்சில உயிர்களென கொன்டான் காவு
பதியும் பரிணாமமும் வளர்ச்சியில் போட்டியிட
மனித இலக்கு இயற்கைக் கெதிராகிட
தாயைச் சேதம் செய்யும் சேய்களாய்
மனிதம் மறந்த மானிடர் செயல்கள்

பூபாரம் பொறுக்க பூதேவி சிறக்க
கணமொரு உயிரென கூட்டினான் காலன்
ஊனுயிரை ஊனாக உண்ணும் கணவன்
கனநேரம் கண்பார்த் தான்கைப் பிடித்தவளை
நரைத்த மயிரை நினைத்தே நொந்து
விதியின் வலியால் வாடினாள் நங்கை

புத்தூயிர் புகட்ட எண்ணிய பதியவன்
சம்சார உடலில் ஊற்றினான் மின்சாரம்
இதயதிற் குப்பதில் இடமாறியது மின்னாக்கி
தாரத்தின் வதனத்தில் அரிதாரமாய் ரசாயனம்
மின்னணுக்கள் ஊடுருவி இருந்தன அவளணுக்களை

பாதச்சுவடின் மறைவில் பலகாலச் சுவடுகள்
செயற்கையாய் செதுக்கினான் செழித்த சிற்பத்தை
இன்று இயற்கை ஆனாள்(ல்) இயந்திரமாய்..

Sunday, July 29, 2007

Kumbakonam Fire Accident - A Retention.

கும்பகோணம்
இப்போது
கர்ணகொடூரம்.


ஆண்டவா!
அதிகாரிகளின்
அலட்சியத்தை
அறிவிக்க..

நிர்வாகிகளின்
பேராசையை
பிரஸ்தாபிக்க...

ஊழியர்களின்
கவனக் குறையை
கவனிக்க...

மழலை உயிர்கள்
என்பது
மிகவே மிகுதி.

குழந்தைகளென்றால்
கொள்ளை பிரியமெனில்
நீயே இங்கு வரலாமே!!
இத்தனை பேரை
மொத்தமாய்க்
கூட்டிச் சென்றாயே!!

நெருப்பே!!
எரியும் போதே
உன் இதயத்தையும்
எரித்து விடுவாயோ!
உன் கோரப் பசிக்கு
குழந்தைகள் தானா
கிடைத்தார்கள் ??

தீபங்களுக்கு
கொள்ளி வைத்ததில்
குதூகலப்ப்டாதே.
இப்போது
விறகுகளும்
உனை ஏற்றிட
கூச்சப்படுகின்றன..
கற்பூரம் கூட
தலை குனிகிறது..


நிர்வாகமே!!!
உன் சீர்கேட்டின்
சாட்சியாய்
இச்சம்பவம்
காலத்தின் பதிவேட்டில்..

நீ வருமானத்திற்கு
வகுத்த வழியில்
வருகிறது அவமானம்.

உன் பணத்தாசை
இன்று பிணக்குவியலை
பரிசளித்திருக்கிறது.

பல நூறு
குழந்தைகள்
காத்திட்ட
தொன்னூறு
தியாக மலர்கள்
சாந்தி பெற

இனியேனும்
திருந்தி விடு..

இனியும்
பள்ளிக்கூடங்கள்
பலிகூடங்கள்
ஆக வேன்டா..